மாம்சம்" வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது அதீதா?"

"மனிதர்கள் யாருமற்ற
வனாந்திரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன கலாபன்"" வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப்பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய், அதீதா"

"உன் புயங்களிலிருந்து உள்ளங்கைகளுக்குப் பரவும் நடுக்கத்தை உணர்ந்தால் நீ சொல்வது உண்மைபோலத்தான் தோன்றுகிறது கலாபன்"

"பூனைக்குட்டிகளைப் பதுக்கிவைத்திருக்கும் உன் மார்புக்கூட்டுக்குள்ளும் சமயங்களில் மழையின் ஓசையை உணர்கிறேன். நீ பூனை மாமிசம் உண்டிருக்கிறாயா அதீதா?"

"என்ன இது, கனவில் கொலை நிகழ்த்துதல்போல. பூனை என்பது மென்மையின் சதை, பட்டுக்கன்னங்கள், குழந்தைகள்"

"முயல் மாமிசமாவது சாப்பிட்டிருக்கிறாயா?"

"ம். முயல்மாம்சம் மெதுமெதுப்பானது மட்டுமல்ல, வெதுவெதுப்பனதும் கூட. என் அடிவயிற்றுக்குள் கதகதப்பான வெப்பம் பாவுவதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன், இந்த முயல் எத்தனை பச்சைப்புல்லைப் புசித்திருக்குமென்று. முயலை உண்னும்போது நானே பசும்புல்லாகிறேன், சமயங்களில் வனமாகவும்"

"சிரிப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை அதீதா, மேல்தோலை உரித்துவிட்டால் பூனைமாமிசமும் முயல்மாமிசமும் ஒன்றுதான்"

'நீ ஏன் இப்போது மாம்சம் பற்றிப் பேசுகிறாய்?"

"தெரியவில்லை. ஆனால் சமீபமாக என் கனவின் அறைகளில் மாம்சத்தின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மழைநாளின் மறுநாளில் தயாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள், என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் உண்மையாக இருப்பதில்லையென்றும் யார்மீதும் மரியாதை செலுத்துவதில்லையென்றும். கூடுதலாய்ச் சொன்னாள் என்னை நினைக்கும்போதெல்லாம் குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே விரிவதாய். நான் இப்படியாகப் பதில் அனுப்பினேன், 'நான் நரமாமிசம் சாப்பிடுபவனில்லை நம்பு' என்று"

"தயாளுக்கும் மாம்சம் பிரியமோ?"

"இல்லை. அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. மாமிசம் உண்ணாதவர்கள் மீது எனக்கு மரியாதையில்லை அதீதா. மாமிசம் உண்ணப்படாத ஞாயிறு தன் பெயரின் அர்த்தத்தை இழக்கிறது"

"எப்போதிலிருந்து மாமிசம் உனக்குப் பரிச்சயம்?"

"என் பன்னிரண்டாவது வயதில். முதல் பரிச்சயமாமிசம் மாட்டிறைச்சி. ஒரு தலித்தாகவும் முஸ்லீமாகவும் பிறப்பதற்கான பேறுபெற்றிலன் நான். ஆனாலும் வறுமை எனக்கு மாம்சமாய் மாட்டுமாமிசத்தையே அறிமுகப்படுத்தியது. ஒரு முஸ்லீம்குடும்பம்தான் எங்கள் குடும்பத்தைப் பராமரித்துவந்தது. மாட்டுமாமிசத்திலேயே அழகானதும் சுவையானதும் உப்புக்கண்டம். மூன்றுநாட்கள் கொடியில் காயும் உப்புக்கண்டம் நான்காம்நாள் தன் சாற்றில் ருசி ஊற்றியிருக்கும். மாட்டுமாமிசம் உண்ணக்கூடாது என்பவர் யாராயிருந்தாலும் மரியாதையாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதே மானமுள்ள காரியமாகும் என்கிறார் பெரியார். பின்னாளில் ஒரு அரசியல் கூட்டத்துண்டறிக்கையில் 'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ"

" கலாபன், நீ உரையாடலின் சமநிலையைக் குலைக்கிறாய். திடீரென்று எதார்த்தத்திற்குத் தாவுகிறாய், அரசியலும் பேசுகிறாய்"

"மீண்டும் சிரிக்கத் தூண்டுகிறாய். எதார்த்தமே அரசியலாயும் அரசியலே எதார்த்தமாயும் இருக்கிறது போலும். நீ விரும்பிப் புசிக்கும் முயலைப்போலவே வளைக்குள் பதுங்க முனைகிறாய்"

"நீ ஏன் என்னைத் தரையிறக்குகிறாய்? உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது கலாபன். நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?"

"இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட"

"அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்"

"தெரியவில்லை. எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?"

"இல்லை, முடியாது. அதற்கான மனநிலை இல்லை. புத்தன் கடைசியாய்ப் புசித்த பன்றி மாமிசம் இருக்கிறது. பகிர்ந்துகொள்வோம்"

- தொடரும்.....

தார்வீஷை நெருங்கும் மரணம்


தார்வீஷ்
இனி உன் கவிதைகளில்
கண்ணியம் பேணு.
நீயினி தெருக்களில் இறங்கிக் கோஷமிட முடியாது.
ஒரு போலிஸ்காரனிடமும்
உதைவாங்கமுடியாது.
உனக்கான நாளை
நீ கொண்டாடமுடியாது.
உன் ஆடைகளைத் திருத்திக்கொள்.
சீக்கிரம் கிழிந்த பட்டன்களைத் தைத்துவிடு.
உன் மீது ஏறிச்
சுழலப்போகிறது பூமி.
உனக்குக் கிடைக்கும் வெகுமதியெல்லாம்
சில முத்தங்கள்,
உச்சமுற்றோ உச்சமற்றோ புணர்ச்சி
சமயங்களில் மடியில் கிடந்து அழும் ஆறுதல்
சமயங்களில் மடியே பிரச்சினையாகி
ஆறுதலுக்காய் அலையும் இருப்பு
சில குழந்தைகள்
காண்டம்
பால்பாக்கெட்
ஆஸ்பத்திரியின் மருந்துநாற்றம்
ரேஷன்கார்டு
ஸ்கூல் அட்மிஷன்
பனியாரக்குடம்
அவ்வளவே.
இனி தாமதமாய்த் திரும்பும்
ஒவ்வொருநாளும் விசாரிக்கப்படுவாய்.
உனது உடலின் வாசனை முகரப்படும்.
பொருப்பற்றுக் கவிதை எழுதமுடியாது.
மரணம் உன்னை நெருங்கிறது தார்வீஷ்.
அதற்குள்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு குடி
எவ்வளவு முடியுமோ
கவிதை எழுது.
அவகாசம் குறுகியது தார்வீஷ்.
சீக்கிரம் உன் இயற்பெயரை ஞாபகப்படுத்திக்கொள்.

இரக்கமற்றுப் பெய்யெனப் பெய்யும் மழை
ஒரே ஒரு தொடுதல்
கிளர்த்தியிருக்கலாம்
உன்னுள் புதைந்துபோன வசந்தங்களை.
ஒரே ஒரு சொல்
மலர்த்தியிருக்கலாம்
நீ மறைக்க விரும்பும் உன் பொய்களையும் தாண்டி.
ஒரே ஒரு பார்வை
உன் இறுகிய நிலத்தை நெகிழ்த்தியிருக்கலாம்.
எங்கோ பெய்கிறது மழை
பாலத்திணைகளைத் தவிர்த்து.
ஒரே ஒரு முறை
மலைமுகடுகளில் எதிரொலித்து
அடங்கிப்போனது
ஒரு நாடோடியின் பாடல்.

ஒரு கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்உனக்கு அவன் உவப்பாயில்லாதிருக்கலாம்.
சமயங்களில் எப்படியாவது அவன்
கண்டுபிடித்துவிடுகிறான்
இருட்டுமூலையில் நீ
தொலைத்த மனசாட்சியை.
அவனது கேள்விகள்
உன் கழுத்துக்குக் கீழே
நீள்வதும் உனக்கு எரிச்சலையூட்டலாம்.
எனக்கும் அவனோடு
கைகுலுக்குவதில் தயக்கமிருக்கலாம்.
ஆனால் அவனது நீட்டிய
கரங்கள் எதற்கானவை
என்ற சந்தேகமில்லை
என்னிடம்.
அவன் ஒரு கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்
மனிதனாயிருப்பதன் அர்த்தம்தான்.
உன்னையும் என்ன்னையும் புறக்கணித்துச்
செல்லும் குரல்கள்
உரக்க இல்லை என்றாலும்கூட
சன்னமாகவேனும்
என் மனசைத் தொட்டு
மீண்டு எதிரொலிக்கிறது,
'கஷ்டஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட் ஹம்
ரா ஹம்ரா கம்யூனிஸ்ட்'.

தனித்திருக்கும் பறவை

வானற்று ஏதும் அறியாது பறவை.
பறவைக்கு ஒரே வான்.
வானுக்கோ பறவைகளில் ஒன்று.
வான் என்பது விரிந்தது
என்றது பறவை.
இறுதியில் தெரிந்தது
வான் என்பது விரிந்த வெளி...
விரிந்த ஒன்றுமற்ற வெளி.
இப்போது பறவை பறக்கிறது
வானைத்தாண்டி.

துப்பாக்கிகளை புதைத்து
துப்பாக்கிகளை விதைத்து
துப்பாக்கிகளை அறுவடை செய்யும்
துப்பாக்கிதேசத்தில்
எப்போதேனும் பெய்கிறது மழை
நீராய்
ரத்தமாய்
உடல்களாய்
சொற்களாய்
கண்ணீராய்......

ஒரே பதில்

ஏன் காதல்கவிதைகள் எழுதுகிறாய்
என்றுகேட்கிறாள் ஒரு அரசியல்தோழி.
உண்மையில் அவள் கேட்கவேண்டியது
ஏன் நீ கவிதைகள் எழுதுகிறாய்.
ஏன் அரசியல் கவிதைகள் எழுதுகிறாய்
என்று கேட்கிறாள் காதல்தோழி.
அவள் கேட்கவேண்டியதும் அதுவே.
ஆனாள் அவள் கூடுதலாய்க் கேட்டது
ஏன் கவிதைகளில் கோப்படுகிறாய்.
எனக்கு ஆத்திரம் வருகிறது
மூத்திரம் வருகிறது
சமயங்களில் கவிதையும்

மறுப்பின் அழகுநீ மறுப்பைச் சொன்னாய்.
அதை அழகாய்ச் சொன்னாய்.
அழகாயிருப்பதால்
அது மறுப்பில்லை என்றாகுமா?
நீ உன் மறுப்பைவிடவும் அழகானவள்.
உன் கண்கள் உன்னை விடவும் அழகானவை.
விலக்கப்படமுடியாதவையுன் கண்கள்.
சமயங்களில் என் கவிதை தற்கொலை
செய்துகொள்ள நேர்கிற இடமும் அதுவே.
நீ கண்களில் விழுங்கி
வார்த்தைகளில் உமிழ்கிறாய்.

தொட்டிமீன்இன்னும் எத்தனைகாலம்
உன் அம்மா தலைவலிக்கு
தைலம் தேய்த்த கதையைச் சொல்வாய்.
கருப்பையோடு சுருங்கிவிட்டதுன் உலகம்.
நீ வாசலுக்குத் திரும்பு
அல்லது கதவை உடை
அல்லது முடி களை
அல்லது கடிதம் கிழி
அல்லது நகம் நறுக்கு
அல்லது....

இறுதி ஊர்வலத்தின் ஞானம்
இறக்கைகள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சியை
யோசிக்கமுடிவதில்லை நம்மால்.
இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சிகளை
நேசிக்கவும் கூடுவதில்லை.
முந்தாநேற்று பார்த்தேன்
இறந்துபோன வண்ணத்துப்பூச்சியைச்
சுமந்துசென்ற எறும்புகளுக்கு
இறக்கைகள் முளைத்திருந்தன.

நீயும் நானுமில்லாத நாளில்...
நீயில்லாத நாளில் நானும்
நானில்லாத நாளில் நீயும்
இருந்திருப்பது சாத்தியம்தான்.
அது நீயும் நானும்
அறியப்படாத காலம்.
நீயும நானுமில்லாத நாளிலும்
இருக்குமிந்த இவ்வுலகம்.
அது உனக்கும் எனக்குமற்ற உலகம்.
ஆயினும் உலகம்.

புவனேஸ்வரி என்னும் விலைநிலக்குறிப்பு
புவனேஸ்வரியின் தேகம் உலர்ந்தது
வறண்ட நிலம்.
முதலில் புவனேஸ்வரியிடம் வந்தது சங்கரன் அய்யர்.
எல்லாம் களைந்தபின்னும்
முதுகில் புரண்டு சிரித்தது பூணூல்.
இரண்டாவதாய் வந்தவன் ஷ்யாம், கணிணி நிபுணன்.
அவனது புணர்தல்
கம்யூட்டர் புரோகிராமிங் போலவே இருந்ததாய்ப்
புவனேஸ்வரி சொல்லியிருந்தாள்.
கடைசியாய் வந்த கவிஞனோ
போதியின் மிகுதியால் புணராமலே
படுத்து உறங்கியபோதுதான்
தெற்குமூலையில்
ஒரு குழந்தையின் ஆர்வத்தோடும்
பூ மலர்வது போலவும்
குண்டு வெடித்துச் சிரித்தது.
இப்போது சங்கரனில்லை
ஷ்யாமும் கவிஞனுமில்லை.
சங்கரன், ஷ்யாம், கவிஞனுக்கிடையில்
இடைப்பட்ட நேரத்தில்
கடவுளும் வந்துபோனதாய்ச் சொன்னது
புவனேஸ்வரியின் பிரேத அறிக்கை.

அழுதலின் நிறம்


சாம்பல்நிறக்கனவொன்றில்
கைவிடப்பட்ட வார்த்தைகள்
உன்னிடம் அழைத்துவந்தபோது
நீ பச்சை ஆடை உடுத்தியிருந்தாய்.
உன்னைச் சுற்றிலும்
வயலெட் நிறத்தில்
மழைபெய்துகொண்டிருந்தது.
வெளிர்மஞ்சள் குடையை
மூலையில் கிடத்தி
பிங்க்நிறக்கதவைத்
திறந்து என்னருகே வந்து
என் பழுப்புத் தலைமுடியைக்கோதி
கையழுத்தி,
'நான் உன்னைப் பிரிகிறேன்' என்றாய்.
இப்போது மழை நின்றிருக்கிறது
கதவு அடைத்திருக்கிறது
கனவு உதிர்ந்து
என்னைச் சுற்றிலும் சாம்பல்.