ஒற்றைத்துளியில் உறையும் கடல்

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில்
இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது.
அந்த கரியநிறப் பறவை
நம் தலைமீதுதான் பயணிக்கிறது
என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம்.
ஆதிவாசி வனாந்திர மய்யத்தில்
கனன்றெரியும் நெருப்பில் ஒழுகும்
மாம்சத்துளி போலவே
உருகி வழிகிறது காலம்.
ஆம், அவன் வளர்ந்திருக்கிறான்.
முன்பு அவன் ஒரு சொல்லைப் போல இருந்தான்.
இப்போது சொல்லாகியிருக்கிறான்.
ஒரு நாளை நான்காய் எட்டாய் மடித்து
அனாயசமாய்க் கிழித்தெறிகிறான்.
அந்த குதூகலம் நம்மிடமில்லை
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சகல ஆண்களிலும் பெண்களிலும்
குழந்தைமையைப் பறித்த குற்றவுணர்வோடு
அவனருகே மண்டியிடுபவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
இனி அவரது கோப்பை
அவனது சிறுநீர்ச்சூட்டால் நிரப்பப்படட்டும்.
கடவுள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

(எதிர்வரும் 30.09.10 அன்று முதல் பிறந்தநாளைச் சந்திக்கவிருக்கும் என் மகன் கத்தார் நவீன்சித்தார்த்திற்கு.)