இந்த அவமானம்
எப்படி
இவ்வளவு இனிப்பாக
இருக்கிறதென்று தெரியவில்லை.
யாரேனும் பாத்திரத்தை 
மாற்றியிருப்பார்களோ?

காலங்களுக்கு இடையே....

அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.
அந்தக் காலத்தில் ராக்கெட் இருந்தது.
அந்தக் காலத்தில் விமானங்களும் இருந்தன.
அந்தக் காலத்தில் அணுகுண்டுகளும்கூட இருந்தன.
அந்தக் காலத்தில் இல்லாமல் இருந்தவர்
குர்தா சாஹேப் மட்டும்தான்.
அவரும் இந்தக் காலத்தில் அவதரித்துவிட்டார்.
ஆமாம், அந்தக் காலம் எங்கேயிருந்தது?
அது நமது காலத்துக்கு வெளியேயிருந்தது.
அந்தக் காலம்
நம்மைக் காலத்துக்கு வெளியே நிறுத்தியிருந்தது.
அந்தக் காலம் நம்முடையதாய் இல்லை.
இந்தக் காலமும் அவர்களுடையதாய் இருக்கிறது.

அசைந்து அசைந்து
மலைப்பாம்பு
வந்து சேர்வதற்குள்
மரணம்தான்
எவ்வளவு நேரம்
காத்திருக்க வேண்டியதிருக்கிறது?

புத்தம் புதிய ஏற்பாடு

2014 ஆண்டுகளுக்கு முன்பு 
இதே தினத்தில்
தவறுதலாய்ப் பிறந்துவிட்டார் யேசு.
அடல் பிகாரிஜி அவரை மன்னியும்!
நீங்களும்தான் குர்தா சாகேப்...
பிளாஸ்டிக் சர்ஜரியே
அறியாத காலத்தில் பிறந்தவர்
தான் செய்தது இன்னதென்று மட்டும்
அறிந்திருப்பாரா என்ன?
தயவுசெய்து முள் முடிகளை
காந்தியின் தலைக்கு மாற்றுங்கள்.
சிலுவைக்கு யாராவது
சிக்காமலா போவார்கள்?

சிவாஜி சாகவில்லை

‘கை வீசம்மா கைவீசு' பாடிக்கொண்டே
சாவித்திரியுடன் செத்துப்போன சிவாஜி
சில வருடங்களுக்குப் பிறகு
உயிர்த்தெழுந்தார்.
இப்போது அவர் ரத்தத்தில்
உப்பின் அளவு அதிகரித்திருந்தது.
சதா துடித்துக்கொண்டிருந்த
இடப்பக்க மீசையை அடக்க
யாரோ அவர் கையில்
ஒரு பதக்கத்தைத் திணித்தார்கள்.
இப்போது செத்துக்கொண்டிருந்த
ஸ்ரீகாந்தை அணைத்தபடி
‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’
பாடத் தொடங்கினார்.
ஆனால் ஒன்று,
இந்தமுறை சிவாஜி சாகவில்லை.