பிறழ்வு

அவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள்.
பீதியூட்டப்பட்ட என்
சிறுபிராயத்தை விடவும்.

மறைபொருட்களின் சாட்சியங்களாய்த்
திறந்தமேனிகளோடு
திரிந்துகொண்டிருக்கிறார்கள் தெருவெங்கும்.

எல்லோருக்குமேயிருக்கிறது
அவர்களிடம்
அச்சத்தோடு கூடியவிலகல்.

சமரசமற்ற அவர்களிடம்
புகையொடு வசவுகளை உதிர்த்தபடி
வாகனங்களே விலகிச்செல்கின்றன.

யாருடனோ சதா சண்டையிடுகிறார்கள்.
யுத்தமுடிவு இதுவரை தெரியவில்லை.

எல்லாவிடங்களிலும்
திறந்தவெளிகளில்
மலங்கழிக்கும் அவர்கள்
மழைகளைத்துளிகளைப்போலவே
சடார் சடாரென்ற அதிர்வுடனே
ஒன்றாய்ப்
பத்தாய்
நூறாய்ப்
பெருகக்கூடும்.
பின் அவர்கள் நாமாகவும்
நாம் அவர்களாகவும்...

அனேகமாய்க் கடவுளின் எண் 1234567 ஆக இருக்கலாம்

எண் 1

பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்டு
நாடுகடத்தப்பட்டவன்/ள்

எண் 2

துரோகி எனச் சந்தேகிக்கப்பட்டு
இயக்கம் விட்டுத் துரத்தப்பட்டவள்/ன்

எண் 3

ஆண்பிள்ளையில்லை எனச் சந்தேகிக்கப்பட்டு
வீடு விட்டுத் துரத்தப்பட்டவன்ள்

எண் 4

சந்தேகத்திற்கிடமற்ற மனைவியில்லை
என்று சந்தேகிக்கப்பட்டு துரத்தப்பட்டவள்.

இப்படியாக 123456 எண்கள் சேர்ந்தன.
கடவுளின் தொலைபேசி எண்ணும்
அதுவே எனச் சொல்லப்பட்டது.
123456 எண்ணை மீண்டும் மீண்டும் முயன்றபோது
ஒரேபதிலே கிடைத்தது.
'சந்தாதாரர் தொடர்பெல்லைக்கு
வெளியே இருக்கிறார்.
இந்தச் சந்தாதாரரை
இப்போது தொடர்புகொள்ள இயலாது'.

என் செல்லமகள் சாதனாநெருக்கடி வாழ்க்கையின்
பரபரப்புவேளையொன்றில்
பள்ளிகிளம்பிய தன் செல்லமகள் யுகாவிற்கு
காலைப்பொழுதில் நகம்வெட்டும் தருணத்தில்
அதன் மென்மையுணர்ந்து
விரல்கள் நடுங்குவதாய்க்
கலங்குகிறான் வில்லியம்.
கண்ணிவெடிகளால்
கைகால் இழக்கும்
பிஞ்சுமுகங்களை
அட்டையில் போட்டு
அலங்கரிக்கவேண்டாமென்று
அலறுகிறான் இளங்கோ.
ஒருபூங்கொத்தைப் போல
என்னருகில் படுத்திருந்த
என் செல்லமகள் சாதனா
கனவில் சிரித்தது
அனேகமாய்க் கடவுளுடனாயிருக்கலாம்.
அதிகாலையில்
படுக்கையை நனைத்த
அவள் மூத்திரம்
பூமியின் கிழக்குப்பகுதியிலிருந்து
வடக்குப்பகுதிக்கு
ஓடிவந்திருந்தது.
சுவரில் மாட்டியிருந்த
தேசப்படமோ ஈரத்தில் நனைந்திருந்தது.

...............

"உலகம் என்றால் என்னப்பா?"
என்றுகேட்டாள் என்செல்லமகள் சாதனா.
அது நீ விளையாடும் ஏரோப்பிளேன்
பொம்மையைப் போல ஒரு பொம்மையென்றேன்.
அவள் விளையாட
ஒரு உலகத்தையும் வாங்கித்தந்திருந்தேன்.
இப்போது என் பிரார்த்தனையெல்லாம்
நானும் கடவுளும்
கூடிச் சண்டையிடும்
இந்த தனியறைக்குள்
அவள் வந்துவிடக்கூடாது என்பதே.

- நண்பர்கள் யவனிகா மற்றும் செல்மாபிரியதர்சனுக்கு.