நெஞ்சொடு கிளத்தல்

பாம்புகள் புரளும் படுக்கையில்
புரண்டுபடுக்காதே, ஏதேனும்
பட்டாம்பூச்சிகள் சாகக்கூடும் யதி.
கடற்கரையின் மணல்பரப்பில்
பதிந்திருந்த காலடிச்சுவடுகளை
மட்டுமே கணக்கெடுக்கிறாய்
உடைந்துசிதறிய நத்தையோடுகளை
என்ன செய்யலாம் யதி?
கைகள் கோர்த்துத் திரிந்த
கடற்கரையில்லையிது.
எப்போதோ தட்டுத்தடுமாறிய
ஒரு பாய்மரக்கப்பல்
கரைசேரத்தவித்ததொரு கரை.
நினைவிழந்து சிதறியநாட்களில்
உனது அலை சற்றேனும்
எனை நனைத்துச்செல்லவில்லை.
வன்மத்தின் கொலைநாட்களில்
யாருமற்று விசும்பியநாட்களிலும்
உனதுகடலை உன்
ஜன்னலைத் தாண்டிப் பாய
அனுமதிக்கவில்லை.
எங்கோ என் பிணம் மீதேறி
நடந்துசென்றவனின் கண்ணீர்
கடலாய்ப் பாவிப்பரவுகிறதா யதி?
நம்பமுடியவில்லை
நீ என்னைக் கைவிட்டுச்சென்றுவிட்டாயென.
உன் ஆறுதல்
உன் எழுத்து
உன் புன்னகை
உன் கண்ணீர்
இப்படியான உனதுகள்
எனக்கு அருளப்படாதபோதும்
அது என்னிடமிருந்து பறிக்கப்பட்டதையும்
சிரித்துக்கொண்டே நீ காறியுமிழ்ந்ததையும்.
ஆனால் இன்னமும் நம்பமுடியாதைவைகளின்
பட்டியல்களை விவரிப்பததெதற்கு யதி?
உன்னைப் பிரிகிறேனென்னும் நினைப்பே வலிக்கிறது.
ஆனால் உன்னோடிருப்பது அதைவிடவும்...

உறக்கத்தின் மீது படர்ந்து..


புதிதாய் எதுவும் சொல்லப்போவதில்லை
புதிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லையும்கூட.
மீண்டும் மீண்டும்
அடித்தடித்து எழுதப்படுகின்றன பிரதிகள்.
மரங்கள் தங்கள் கனிதவிர்த்து
வேறெதுவும் தருவதில்லை.
ஸ்வஸ்திக் இருள்சூழ்ந்த பிரேதேசத்து இருட்டில்
கதவினிடுக்கின் வழியாய்க் கசிந்த வரிகள்தான்.
நீங்கள் உறங்குகிறீர்கள்..
போபாலில் மூச்சடைத்து இறந்துபோன சிசு
குஜராத்தில் ஓம் செதுக்கப்பட்ட நெற்றிகள்
கயர்லாஞ்சில் பிறப்புறுப்பில் செருகப்பட்ட வாட்கள்
செந்தூரம், தலைப்பாகை, மீசைத்திமிர், லத்திவெறி
இவையேதும் அறியாது உறங்குவது நல்லதே.
உறங்குவது நல்லதுதானே
உங்கள் கதவுகள் தகர்க்கப்படாதவரை

என்னதாண்டா பெப்சியில இருக்குதப்படி? - அதுக்கு எருமைமாட்டுமூத்திரத்தைக் கப்பில குடிநூற்றாண்டுகளைக் கடந்துவந்திருக்கிறீர்கள்
மீண்டும் திரும்பிப்பார்க்கத் தயாராயில்லாமலேயே.
நியாயம்தான்
கடந்துவந்த நூற்றாண்டுகளின்
ஓலம், அழுகை, கண்ணீர்,
புழுதி, ரத்தம், நிணம்,
வியர்வை என எதுவும் இப்போது தேவையில்லைதான்.
இப்போது சாதரணமாய்க் காணவியலும்
ஒரு புரோட்டாவைக் கொத்தித்தின்று
ஒரு மிடறு பெப்சியருந்துமிளைஞனை.
உங்கள் உற்சாகமான இரவுகளிலும்
விரும்பப்படும் மதுவின்
விரும்பப்படா மணருசி மறைக்க
கலக்கவும் கூடும்.
எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா
அதன் நிறம்
கருக்கலைந்த தாயின்
உதிரத்தின் நிறமொத்திருப்பதை.

பிணங்களின் விலை விசாரித்து...நீங்கள் இப்போது ஒரு
புதிய அங்காடிக்குள் நுழைந்திருக்கிறீர்கள்..
புதிய அனுபவத்திலும்கூட.
நகரப்பேருந்துகளில்
சகமனிதர் கக்கங்களையே நுகர்ந்த உங்களுக்கு
குளிர்மையோடு
இதுவரை நுகர்ந்தறியா மணமும்
அளிக்கப்படுகிறது.
ஒருகுழந்தையைத் தொடுவதைப்போலவே
புத்தம்புதுக் காய்கறிகளை வருடுகிறீர்கள்.
வெளியே வந்தவுடன்
மீண்டும் முகத்திலறைகிறது
மதியவெய்யிலின் வெம்மையும்
பேருந்துகுறித்த பயமும்.
மறந்திருந்த கணங்களில்
உங்களால் உணரமுடிந்ததா
நீங்கள் வருடியவை
குளிர்பதனப்பெட்டியிலிருந்த பிணங்களென்பதையும்
குளிர்மணத்திற்கிடையிலும் வீசியது
நீங்கள் தவிர்க்கவிரும்புகிற
அதே கக்கங்களின்
கிராமத்து வாசனை என்பதையும்...