அதுவுமின்றி.....


சொற்கள் எறும்புகளைப் போல
ஊர்கின்றன.
கொஞ்சம் கூச்சமுடனும்
கொஞ்சம் வலியுடனும்.

-----------------
இன்னும் மடிவிட்டு இறங்காத
குழந்தையைப் போல
இருக்கிறது என்னிடம்
ஒரே ஒரு சொல்.

பயணமற்ற வெறும் பாதைமழையற்றுப்போன பூமியின் கண்களில்
சூரிய எரிச்சல்.
தணிக்கும் பனித்துளி முத்தம்.
இன்னும் தாவெனக் கைநீட்டிக்
காத்திருக்கும் கொன்றைச்சிவப்பிற்காய்
அதிகாலை. அப்பனியில்
உடன்வந்த யாத்ரீகனின்
ஷூத்தடங்கள் பட்டு
விலகி மரிக்கும் புல்வெளியில்
இறுதியாய்க் கேட்டது அவ்
வண்ணத்துப்பூச்சியின் பாடல்.
காலைகளைப் பார்ப்பதற்காய்
உறக்கத்தைத் தொலைக்க வேண்டிய
அவசியமில்லை என்று
போர்வைக்குள்
புதைகிறாள் அவள்.

கொலைக்களம்


வியப்பதற்கு ஏதுமில்லை
வாட்களின் பளபளப்பு.
யுத்தமென்று சொல்வதற்கும்
நியாயங்களில்லை.

சுன்னத்குறியினரைத்
தேடியலையும்
வாளின்பசியின்முன்
கையறுநிலையன்றி யாதுமில்லை.
மறைப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும்
என்றாயின அடையாளங்கள்.

கழுகும்
சிறகுவிரிக்கும்நிலத்தில்
சிசுக்களின் ரத்த நிணங்களால்
ஈரப்பட்டது பூமி.

உரத்த அழுகுரல்களில்
அமுங்கிப்போனது
வரலாற்றில் முன் ஒலித்த
கிழட்டுத்தீனக்குரல்.

இன்னுமொரு
கொடுமழை வரும் அறிகுறியாய்ச்
சிவந்துகிடக்கிறது வானம்.

பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
செத்துக்கிடந்தார் காந்தி.

(குஜராத் இனப்படுகொலையையொட்டி ஆளூர் ஷா நவாஸ் தொகுத்து வானம் வெளீயீட்டகம் சார்பில் வெளிவந்த 'தோட்டாக்கள்' கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை)