காலம்

அவர் காலமானார்
என்றார்கள்.
நாம் என்ன ஆனோம்?

கருணைக்கொலை













பனிபெய்கிறது தயாள்!
கம்பளிகளை இறுக்கிக்கொள்.
பாம்புகள் நெளியும் பாதைகளில்
பயணம் அமையாதிருக்கட்டும்.
ரொட்டித்துண்டிற்காய்
நாவை அரிந்து தரும்படி
இறுகிக்கிடக்கிறது காலம்.
மணிக்கூண்டின் கடிகாரமுட்களில்
நசுங்கிச்செத்தது புறாவொன்று.
வேறெவரையும் விட
எச்சரிக்கையாயிரு கருணையாளர்களிடம்.
ஒவ்வொருகருணையாளனின் நிழலின்கீழும்
பதுங்கிக்கிடக்கிறது வன்மத்துடன்
உருவத்தயாராயிருக்கும் வாள்.
சாவுகடக்காத வீட்டில்
மனோன்மணி கடுகுவாங்கி
திரும்பியிருந்தபோது
பரிநிப்பானம் அடைந்திருந்தான் புத்தன்.
நேற்றுமுதல்நாள்
ஒரு சின்னஞ்சிறுதளிரை வெட்டினேன்
புத்தனின் பெயர்சொல்லி.

கவனம்













சின்னக்குழந்தையாய்
மழை
சிணுங்கிக்கொண்டிருக்கும்.

வாகனங்களின்
விரைதலினின்று
தப்பித்து ஓடும்
ஒரு காலிழந்த நாயொன்று.

அன்றாடங்களிலொன்று
அடிபட்டதன் வலியோடு
அவசரமாய் எடுக்கப்படும்
நடைபாதைக்கடைகள்.

ஒரு தொழுநோயாளியின்
பிச்சைப்பாத்திரம்
சில்லறைக்காசுகளாலன்றி
மழைநீரால் நிறையும்.

ஒதுங்க இடம்
தேடி

டு
ம்
நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.

முடிவாய்...




விடைபெறும் நேரம்
பள்ளத்தாக்கெங்கும்
அமைதியே நிரம்பியிருந்தது.

என் மார்பு ரோமங்களைத்
தனதாக்கிக்கொண்ட மிருகம்
எழுந்துவந்து
உன் கன்னங்களில் மாறி மாறி
அறைய விரும்பியது.

உடலெங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது
உப்புக்கரிக்கும் ரத்தம்.

நீ விடைபெற்றுபோனபின்
உன் பெயரெழுதி...
பெயரெழுதி...
கிழித்துப்போடுகிறேன்.

நாய்ப்பசி










யுகப்பசியெடுத்துத்
திரிந்துகொண்டிருந்தது நாய்.

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய
ஓலம்தாங்காது
உதிர்ந்து விழுந்தன விண்மீன்கள்.

பிரளயப்பசியில் தன்
பின்னுடலைக்
கடித்துப்பார்த்தும்
வராதபோது
ஆத்திரப்பட்டு
வானவிளிம்பில் போய்
முட்டிக்கொண்டது.

சூரியன்மேல்
சிறுநீர் கழித்து
ஓடிய நாயின் பற்கள்
நிலாவை
மண்ணில் போட்டுப்
புரட்டிப் புரட்டி
இழுத்துப் பார்த்தது.

காணச்சகியாத கடவுள்
ஆதாமின் விலா எலும்பெடுத்து
தூக்கிப்போட்டார்
நாய்
கடித்துக்குதற.

பிளாஸ்டிக் சிலுவை




















உடல்கள் மொழிபெயர்க்கப்படும்
பின்னிரவுவேளை
ஒரு இனிய திரவகணத்தில்
பிளாஸ்டிக்கால் ஆன சொர்க்கத்திலிருந்து
தப்பித்துவந்தார் கடவுள்.
தேநீரகத்தில் கடவுளுக்குக்
கையளிக்கப்பட்டன
PCR சனியனுக்குப் பயந்து
use and throw டம்ளர்கள்.
பூமியின் மார்பெங்கும்
பூணூலைப்போல
வெளுத்துக்கிடந்தன
பிளாஸ்டிக் டம்ளர்கள்.
கடவுள் முட்டாள் என்பதற்கு
அழிக்கப்பட முடியாத
பிளாஸ்டிக்குகளே சாட்சி.
உருவிப்போடப்பட்ட ஆணுறையின்
ஒழுகும் துளிகளில்
கடவுளின் ஆயுள்
குறைந்துகொண்டிருந்தது.
மீண்டும் தப்பித்தோடினார் கடவுள்.
வவ்வால்கள் அடையும்
பாழடைந்த மண்டபத்தின் இருள்மூலையில்
கடவுளின் காலில்
அகப்பட்டது
தேவகுமாரனின் சடலம்.
பக்கத்தில் கிடந்தது
ஒரு பிளாஸ்டிக் சிலுவை.