காட்டாற்றின் கரையிலொரு சருகு















மலையிடுக்குகளில்
கசிந்துகொண்டிருந்தது
ஆதியில் புனையப்பட்ட பாடலொன்று.

பாடலின் விஷம் தெறித்து
நீலம் பாரித்தது வெளி.

விஷமருந்திய போதையின்
வெறியில்
மயங்கி ஆடினர் மாந்தரெல்லாம்.

கைகோர்த்து
கைகோர்த்து
நடந்துமுடிந்த
ஆட்டமுடிவில்
குறிகளின் இடத்தில்
கொம்புகள் முளைத்தது எல்லோர்க்கும்.

கொம்புகளால்
தாக்கத்தொடங்கிய கூட்டத்திடை
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
புனையப்படாத பாடல்கள் பாடுவோரை.

அவரே நம் சினேகத்துக்குரியவர்.

0 comments: