சிறுநீர் பெய்த தடயம்


பலராலும் எச்சில் படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத
பெயரை எனக்கு
நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு பெயராய் நான்
உணரப்படும் கணம்
தீக்குச்சியின் முனை கருகிய
வாசத்தை
உணர்ந்து தீர்கிறேன்.