பிணங்களின் விலை விசாரித்து...நீங்கள் இப்போது ஒரு
புதிய அங்காடிக்குள் நுழைந்திருக்கிறீர்கள்..
புதிய அனுபவத்திலும்கூட.
நகரப்பேருந்துகளில்
சகமனிதர் கக்கங்களையே நுகர்ந்த உங்களுக்கு
குளிர்மையோடு
இதுவரை நுகர்ந்தறியா மணமும்
அளிக்கப்படுகிறது.
ஒருகுழந்தையைத் தொடுவதைப்போலவே
புத்தம்புதுக் காய்கறிகளை வருடுகிறீர்கள்.
வெளியே வந்தவுடன்
மீண்டும் முகத்திலறைகிறது
மதியவெய்யிலின் வெம்மையும்
பேருந்துகுறித்த பயமும்.
மறந்திருந்த கணங்களில்
உங்களால் உணரமுடிந்ததா
நீங்கள் வருடியவை
குளிர்பதனப்பெட்டியிலிருந்த பிணங்களென்பதையும்
குளிர்மணத்திற்கிடையிலும் வீசியது
நீங்கள் தவிர்க்கவிரும்புகிற
அதே கக்கங்களின்
கிராமத்து வாசனை என்பதையும்...

0 comments: