என் செல்லமகள் சாதனா



















நெருக்கடி வாழ்க்கையின்
பரபரப்புவேளையொன்றில்
பள்ளிகிளம்பிய தன் செல்லமகள் யுகாவிற்கு
காலைப்பொழுதில் நகம்வெட்டும் தருணத்தில்
அதன் மென்மையுணர்ந்து
விரல்கள் நடுங்குவதாய்க்
கலங்குகிறான் வில்லியம்.
கண்ணிவெடிகளால்
கைகால் இழக்கும்
பிஞ்சுமுகங்களை
அட்டையில் போட்டு
அலங்கரிக்கவேண்டாமென்று
அலறுகிறான் இளங்கோ.
ஒருபூங்கொத்தைப் போல
என்னருகில் படுத்திருந்த
என் செல்லமகள் சாதனா
கனவில் சிரித்தது
அனேகமாய்க் கடவுளுடனாயிருக்கலாம்.
அதிகாலையில்
படுக்கையை நனைத்த
அவள் மூத்திரம்
பூமியின் கிழக்குப்பகுதியிலிருந்து
வடக்குப்பகுதிக்கு
ஓடிவந்திருந்தது.
சுவரில் மாட்டியிருந்த
தேசப்படமோ ஈரத்தில் நனைந்திருந்தது.

...............

"உலகம் என்றால் என்னப்பா?"
என்றுகேட்டாள் என்செல்லமகள் சாதனா.
அது நீ விளையாடும் ஏரோப்பிளேன்
பொம்மையைப் போல ஒரு பொம்மையென்றேன்.
அவள் விளையாட
ஒரு உலகத்தையும் வாங்கித்தந்திருந்தேன்.
இப்போது என் பிரார்த்தனையெல்லாம்
நானும் கடவுளும்
கூடிச் சண்டையிடும்
இந்த தனியறைக்குள்
அவள் வந்துவிடக்கூடாது என்பதே.

- நண்பர்கள் யவனிகா மற்றும் செல்மாபிரியதர்சனுக்கு.

2 comments:

said...

இரண்டு கவிதைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன.

said...

இக்குரூர உலகில் குழந்தைகளும் பிராணிகளும் பரிதாபத்திற்குரியவர்கள். ஏனெனில், ஏன் இவ்விதம் நிகழ்கிறது என்று உணரக்கூட அவர்களால் முடிவதில்லை. உங்கள் கவிதையின் கடைசி வரிகள் கவிஞர் பா.தேவேந்திரபூபதியின் 'அந்தர மீன்'தொகுப்பிலுள்ள ஒரு கவிதையை நினைவுறுத்துகின்றன.

'என்பதுதான் என் பிரார்த்தனை
என் செல்லமே!"
என்று முடியும். வெளியூரிலிருப்பதால் வரிகளைச் சரியாக வாசித்து எழுத முடியவில்லை. நினைவிலிருந்ததை எழுதியிருக்கிறேன்.