அனேகமாய்க் கடவுளின் எண் 1234567 ஆக இருக்கலாம்

எண் 1

பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்டு
நாடுகடத்தப்பட்டவன்/ள்

எண் 2

துரோகி எனச் சந்தேகிக்கப்பட்டு
இயக்கம் விட்டுத் துரத்தப்பட்டவள்/ன்

எண் 3

ஆண்பிள்ளையில்லை எனச் சந்தேகிக்கப்பட்டு
வீடு விட்டுத் துரத்தப்பட்டவன்ள்

எண் 4

சந்தேகத்திற்கிடமற்ற மனைவியில்லை
என்று சந்தேகிக்கப்பட்டு துரத்தப்பட்டவள்.

இப்படியாக 123456 எண்கள் சேர்ந்தன.
கடவுளின் தொலைபேசி எண்ணும்
அதுவே எனச் சொல்லப்பட்டது.
123456 எண்ணை மீண்டும் மீண்டும் முயன்றபோது
ஒரேபதிலே கிடைத்தது.
'சந்தாதாரர் தொடர்பெல்லைக்கு
வெளியே இருக்கிறார்.
இந்தச் சந்தாதாரரை
இப்போது தொடர்புகொள்ள இயலாது'.

0 comments: