அரவபதம்















மதுவின் விஷம் மாறி
உன் கோப்பையை நிரப்பத்தொடங்கியபோது
அனேகமாக அது
நள்ளிரவின் முன்னிரவாயிருக்கலாம்.
ஒவ்வொரு ஜன்னல்களாய்ச்
சாத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
விடுதியறையின் ஏதோ ஒன்றில்
அணைக்கப்படாத சிகரெட்
படுக்கைவிரிப்பைப் பொசுக்கியிருந்தது
மழையில் நனைய நாய்கள் தயாராயில்லை.
பிணத்தை ஏற்றிக்கொண்டிருந்த
ஊர்தியொன்று விரைந்தது.
விருப்பமுற்றோ அற்றோ
உடனுறைந்தனர் பெண்கள்.
நானோ குறுஞ்செய்திகளென
சில பாம்புகளை
உனக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.
உன் மென்னுடல் தீண்டிப்
பசியழித்த அரவங்கள்.
மதுதெளிந்த காலை
என் பாம்புகள் சிலவற்றை
எனக்கே அனுப்பிவைத்தாய்.
பயமாயிருக்கிறது
என் தோட்டத்தில் பூத்துக்குலுங்குகிறது
நீலநிறப்பூக்களும்
சில புடலங்காய்களும்.

1 comments:

said...

கவிதை நன்றாகத்தானிருக்கிறது. ஆனால், பாம்புகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பும்போதல்லவா யோசித்திருக்க வேண்டும்... குறுஞ்செய்தியைப் பெற்றுக்கொண்டவரின் தொலைபேசியுள் இப்போது விடம் முறிந்து கிடக்கலாம் அந்தச் சொற்கள். காலத்திற்கு அந்தச் சக்தியும் உண்டல்லவா?