ஆதியில் இருந்தது இப்போது இல்லை



விலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


நாயகர்களின் வருகை

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன.
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.
தேர்க்கால்களில் கன்றுகள்
அடிபடுவதுபற்றி கவலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.
கடல் விழுங்கி
வாமனர்களின் நகரங்கள் அழியுமொரு நாளில்
தொடங்கி விட்டன
நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை மேசையில்
கிடத்தப்பட்டிருப்பது நீங்களும் நானும்தான்.
இரண்டாம், மூன்றாம், எட்டாம், பதினான்காம்
மன்னர்களின் மகுடங்களை அளவிடும்
வாய்ப்பு வரலாறு அழைக்கிறது.
மகுடங்களின் அளவு ஏறக்குறைய
சவப்பெட்டிகளின் அளவுகளை ஒத்திருப்பது
தற்செயலானது என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
தூரதேசங்களின் கிளர்ச்சி
உங்கள் செவிகளை எட்டாதிருக்கட்டும்.
கண்கள் விறைத்த பிணங்களை முன்னிட்டு
முறையீடு செய்பவர்களின் பக்கம்
உங்கள் கவனம் திரும்பாதிருப்பது இன்னமும் நல்லது.
நேற்று ஆண்குழந்தை பிறந்த
நண்பனின் குறுஞ்செய்தியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
வரலாறு பள்ளங்களை நிரப்பும்.
அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.