தீ














கக்கங்களைச் சிரைக்கும்
நாவிதரின் நுட்பம் வாராதுபோனால்
புணர்ந்துகொண்டிருக்கும்
நாய்களின்மேல்
கல்லெறிவதாயிருக்கட்டும்
இக்கவிதை.
-------------
என்மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.

-------------

தீக்கங்கைத் தின்றபடி
தெருவெங்கும் அலைகிறதொரு மிருகம்.
மாகாளி மீதுகண்வைத்தபடி.
ஜகத்தினை அழிக்கவேண்டியதுதான்.
அக்கினிக்குஞ்சுமில்லை
பொதிந்துவைக்க
பொந்துமில்லை.

---------------
.

கனா

















நேற்றிரவு நீலமாய்
வந்ததொரு கனவு.
கனவின் நீலம் இமைகளில் விரிந்தவேளை
கனவினின்று
வெளிப்பாய்ந்தது முயல்குட்டி.
படுக்கை முழுதும்
பச்சைப்புல்வெளி.
கதகதப்பாயிருக்கிறது
முயலின் அருகாமை.

தலையூழி















மலைப்பாம்பின் வயிறுகிழித்து
துள்ளிக்குதிக்கிறதொரு ஆட்டுக்குட்டி.
வெடித்துச்சிதறுகிறது நடுகல்லொன்று.
நாவாயை நிறைத்து
நுரைக்கிறது அலை.
பூமியை ஒரு பந்தாய்ச் சுருட்டி
தன் தீட்டுத்துணியில்
ஒளித்துவைக்கிறாள் பூதகி.

தேவையற்ற மன்னிப்பு

ஒவ்வொருமுறையும் மன்னிப்பு
கேட்கிறேன்.
எனில்
ஒவ்வொருமுறையும் தவறு செய்கிறேன்.
இம்முறை
மன்னிப்பு வேண்ட விரும்பவில்லை.
வெட்கங்கட்டுக்கிடக்கிறது
நானும் என் மன்னிப்பும்.

அரவபதம்















மதுவின் விஷம் மாறி
உன் கோப்பையை நிரப்பத்தொடங்கியபோது
அனேகமாக அது
நள்ளிரவின் முன்னிரவாயிருக்கலாம்.
ஒவ்வொரு ஜன்னல்களாய்ச்
சாத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
விடுதியறையின் ஏதோ ஒன்றில்
அணைக்கப்படாத சிகரெட்
படுக்கைவிரிப்பைப் பொசுக்கியிருந்தது
மழையில் நனைய நாய்கள் தயாராயில்லை.
பிணத்தை ஏற்றிக்கொண்டிருந்த
ஊர்தியொன்று விரைந்தது.
விருப்பமுற்றோ அற்றோ
உடனுறைந்தனர் பெண்கள்.
நானோ குறுஞ்செய்திகளென
சில பாம்புகளை
உனக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.
உன் மென்னுடல் தீண்டிப்
பசியழித்த அரவங்கள்.
மதுதெளிந்த காலை
என் பாம்புகள் சிலவற்றை
எனக்கே அனுப்பிவைத்தாய்.
பயமாயிருக்கிறது
என் தோட்டத்தில் பூத்துக்குலுங்குகிறது
நீலநிறப்பூக்களும்
சில புடலங்காய்களும்.

சாத்தியங்கள்





















ஒரு மது உங்களுக்கு
என்னவெல்லாம் வழங்கக்கூடும்?
உத்திரவாதவமான அரைமணிநேர போதை
எழும்பாக்குறி
இலக்கியச்சண்டை
கருத்துப் பகிர்தல்கள்
சில பாடல்கள்
முலைகள் குறித்த தீவிர உரையாடல்கள்
கண்ணீர்த்துளிகளின் நெகிழ்வு
சில கொலைகள்
அல்லது
சில
அல்லது
பல
தற்கொலைகள்
சமயங்களில்
கவிதை, ஓவியம்
மற்றும் வியாபாரத்திற்கான
முன் திட்டங்கள்
உறுதிமொழிகள்
தீர்மானங்கள்
கெட்டவார்த்தைகள்
பிரம்பு
அல்லது குண்டாந்தடி
அல்லது கொலைவாள்
ஒரேபெயர் சொன்னால்
ஆயுதம் அல்லது அதிகாரம்
வசைபாடல்
தன்னைநிறுவல்
சில நேசங்களின் இழப்பு
இதயங்களின் மீதான
காயங்கள் பரிசளிப்பு
மறுநாளைய மன்னிப்பு

பொழுதிடை தெரியின் பொய்யே காமம்











ஒரு மலையில் உலவிக்கொண்டிருந்தேன்.
மேகம் தவறிப்போய்
மடியில் விழுந்தது.
நினைத்திருந்தேன் மேகம்
பஞ்சுப்பொதிபோலவும்
குழந்தையின் உள்ளங்கை போலவும்
மென்முலை போலவும் இருக்குமென்று.
மேகமிருந்தது மேகமாய்...

அன்னியம்


















இருளற்று எதுவுமில்லை
ஒளி குறித்த புரிதலில்லை.
சுற்றிலும் ஈரம்
தொப்புள்கொடியின்றி
துணையில்லை.
பூமியில் கால்பதித்த கணம்
காலுதைத்து
காலுதைத்து
வீறிட்டழுகிறேன்
அன்னியமும்
பயமுமாயிற்று
இருள்
ஈரம்
தனிமை.