மிருகம்








ஒரு முத்தத்தைத் தந்து

என்னை அபகரித்துப்போனாய்.
என் இறைச்சியின் கொதிப்படங்கும் முன்னரே
உன் வேட்டை முடிந்துவிடுகிறது.
கரையோரத்தில்
ஒற்றைத்தூண்டிலோடு

காத்திருக்கும் நீ ஆழங்களில் அமிழ்ந்திருக்கும்

ரகசியங்கள் பற்றிக் கவலையற்றிருக்கலாம்.

ஆனால் ஒருபோதும்

வெல்லமுடியாத என்னை
உன் மொழியால் ஆண்டதாய்ப்
பெருமிதம் கொள்ளும் உனக்கு
கனவுகளில் தீர்த்துக்கொள்ளும்
என் வஞ்சமே பதிலாயிருக்கும்.

கணவன் என்ற மிருகம்
















விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

பஞ்சமனின மொழியில்











வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்

மண்
















அவர்கள் வாழும் மண் உங்களுடையதா
அல்லது நீங்கள் வாழும் மண் அவர்களுடையதா
அல்லது
பொதுவாக நீங்கள் இருவரும் வாழும் மண்
யாருடையது என்பது குறித்த ஆய்வுகள்,
விவாதங்கள்,கருத்துரைகள்
தயாரிக்கப்படுகின்றன உங்களால்,
அவர்களாலும்கூட
மண்ணில் பொதித்த கண்ணிவெடியால்
சொச்சம் முதியவர்களைக் கொன்றீர்கள்..
அவர்கள் விண்ணிலிருந்து மண் நோக்கிப்
பொழிந்த குண்டுகளால்
சொச்சம் பிஞ்சுகளைக் கொன்றார்கள்.
எப்படியாயினும் பிணங்கள்
போகப்போவது மண்ணிற்குத்தானே.
(மண்ணிலிருந்து காணாமல் போனவர்களின் பட்டியல் தனி)
ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றும்போதோ
அல்லது மீட்கப்படும்போதோ
அழிவதென்னவோ மாற்றினத்து
பெண்ணுடல்கள்தான்.
யோனி மூடிய மண்
பெண்
மண்
பூமிமாதா
உங்கள் மண்ணிற்கான பேச்சுவார்த்தைக்கு
அயல் மண்ணிலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.
நீங்களோ எதிரியோ
வெற்றி பெறும்போது
கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மண்ணை
அவர்களுக்கு விற்கத்தொடங்குவீர்கள்.
இன்னமும் உங்களுக்கு மண் மீதுதான் பிரியம் எனில்
சில பொட்டலங்களில் சேகரித்துக்கொள்ளுங்கள்.
பலவற்றிற்கு அவை பயன்படும்.
துப்பாக்கி ரவைகள் தயாரிக்க
தேனீரில் கலந்து குடிக்க
முகாம்களுக்கான அடித்தளம் அமைக்க
சில நேரங்களில் பிணங்களின் வாய்களை மூடவும் கூட

கதைசொல்லல்


ம்..
என்று சொல்லிச்
சென்ற
கூட்டத்தின் நடுவில்
ஏன்
என்று கேட்ட
ஒற்றைக் குரல்
மட்டுமே உயிர்ப்பானது.

அழுகலின் சுயம்


"இந்த பூமி
கடவுளின் விதைப்பையைப் போல‌
இருக்கிறது" என்றான் வர்மன்.
''ஆம். வீக்கம் வந்த‌
கடவுளின்..." என்றாள் யாழி.