ஈழம்...

துவக்குகள்
டாங்கிகள்
செல்கள்
விமானங்கள்
தற்கொலைகள்
கொலைகள்
வன்புண‌ர்தல்கள்
கடத்தல்கள்
மாவீரர்கள்
துரோகிகள்
போர்கள்
பேச்சுவார்த்தைகள்'
ஒப்பந்தங்கள்
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
ஒரு வார்த்தையல்ல‌
மரணம்.

( 07.12.2008 அன்று தமிழ்க்கவிஞர்கள் இலங்கைத்தமிழர் படுகொலைக்கு எதிராக நடத்திய கணடனக் கவிதைப் போராட்டத்தில் வாசித்தது)

வினை














ஒருநாயைக் கொல்வது சுலபம்.
அவசரமாய் ஒரு வண்டியேற்றி...
அல்லது சாவகாசமாய்
புணர்ச்சியின்போது
கல்லெறிந்து....
வயிறுவெடித்துச் செத்துக்கிடக்கும்
நாயைக் காணநேர்வதுதான் கடினம்.

கனவின் குருதி
























வெறும் கணம்
இப்போது
உன்முன்னும் என்முன்னும்.
மணலில் ஒளியும் நண்டுகள்போல
வார்த்தைகள் மறைந்தன.
கானகத்தின்
அடர் இருளில் தொலைவதற்காகவே
என்னை வந்தடைந்தாய்.
என் மார்பு ரோமங்களில்
பூப்பூக்கும் நாளில் வா
நிலவை உண்போம்.

அதுவுமின்றி.....














சொற்கள் எறும்புகளைப் போல
ஊர்கின்றன.
கொஞ்சம் கூச்சமுடனும்
கொஞ்சம் வலியுடனும்.

-----------------
இன்னும் மடிவிட்டு இறங்காத
குழந்தையைப் போல
இருக்கிறது என்னிடம்
ஒரே ஒரு சொல்.

பயணமற்ற வெறும் பாதை



















மழையற்றுப்போன பூமியின் கண்களில்
சூரிய எரிச்சல்.
தணிக்கும் பனித்துளி முத்தம்.
இன்னும் தாவெனக் கைநீட்டிக்
காத்திருக்கும் கொன்றைச்சிவப்பிற்காய்
அதிகாலை. அப்பனியில்
உடன்வந்த யாத்ரீகனின்
ஷூத்தடங்கள் பட்டு
விலகி மரிக்கும் புல்வெளியில்
இறுதியாய்க் கேட்டது அவ்
வண்ணத்துப்பூச்சியின் பாடல்.
காலைகளைப் பார்ப்பதற்காய்
உறக்கத்தைத் தொலைக்க வேண்டிய
அவசியமில்லை என்று
போர்வைக்குள்
புதைகிறாள் அவள்.

கொலைக்களம்














வியப்பதற்கு ஏதுமில்லை
வாட்களின் பளபளப்பு.
யுத்தமென்று சொல்வதற்கும்
நியாயங்களில்லை.

சுன்னத்குறியினரைத்
தேடியலையும்
வாளின்பசியின்முன்
கையறுநிலையன்றி யாதுமில்லை.
மறைப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும்
என்றாயின அடையாளங்கள்.

கழுகும்
சிறகுவிரிக்கும்நிலத்தில்
சிசுக்களின் ரத்த நிணங்களால்
ஈரப்பட்டது பூமி.

உரத்த அழுகுரல்களில்
அமுங்கிப்போனது
வரலாற்றில் முன் ஒலித்த
கிழட்டுத்தீனக்குரல்.

இன்னுமொரு
கொடுமழை வரும் அறிகுறியாய்ச்
சிவந்துகிடக்கிறது வானம்.

பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
செத்துக்கிடந்தார் காந்தி.

(குஜராத் இனப்படுகொலையையொட்டி ஆளூர் ஷா நவாஸ் தொகுத்து வானம் வெளீயீட்டகம் சார்பில் வெளிவந்த 'தோட்டாக்கள்' கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை)

சமிக்ஞையில் ஒளிரும் கண்கள்






















தானியமூட்டைகளைத் திடுடித்தின்கையில்
முதன்முதலாய்
செத்துமடிந்தன எலிகள்.
மலையுச்சியில் சரிகின்றன அழுகுரல்கள்.
ஒற்றைப்பனை மரத்தினின்று
தொடர்கின்றன
வேவுபார்க்கும் கண்கள்.
உங்கள் கால்களுக்கடியில்
கிடக்கும் ஒரு பூரானின் பிணத்தைக்
கவனிக்கவியலாது
விரைபவராயிருக்கலாம் நீங்கள்.
நல்லது இப்போது
ஒளிரும் தொலைக்காட்சிப் பெட்டியில்
குலுங்கி விறைத்து
தெறிக்கும் பாப்ப்பாடகியின்
பட்டன்களோடு உங்கள் கண்கள்.
உங்கள் பாப்கார்ன் பொட்டலத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள்
முடிந்தால் ஒரு கோக் டின்னோடு.
உயர்ந்துகொண்டிருக்கிறது விலைவாசி
நீங்கள் இப்போது குனியலாம்
பின்னால் உறுத்தும் துப்பாக்கியின் சமிக்ஞைக்காக.

பிறழ்வு













அவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள்.
பீதியூட்டப்பட்ட என்
சிறுபிராயத்தை விடவும்.

மறைபொருட்களின் சாட்சியங்களாய்த்
திறந்தமேனிகளோடு
திரிந்துகொண்டிருக்கிறார்கள் தெருவெங்கும்.

எல்லோருக்குமேயிருக்கிறது
அவர்களிடம்
அச்சத்தோடு கூடியவிலகல்.

சமரசமற்ற அவர்களிடம்
புகையொடு வசவுகளை உதிர்த்தபடி
வாகனங்களே விலகிச்செல்கின்றன.

யாருடனோ சதா சண்டையிடுகிறார்கள்.
யுத்தமுடிவு இதுவரை தெரியவில்லை.

எல்லாவிடங்களிலும்
திறந்தவெளிகளில்
மலங்கழிக்கும் அவர்கள்
மழைகளைத்துளிகளைப்போலவே
சடார் சடாரென்ற அதிர்வுடனே
ஒன்றாய்ப்
பத்தாய்
நூறாய்ப்
பெருகக்கூடும்.
பின் அவர்கள் நாமாகவும்
நாம் அவர்களாகவும்...

அனேகமாய்க் கடவுளின் எண் 1234567 ஆக இருக்கலாம்

















எண் 1

பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்டு
நாடுகடத்தப்பட்டவன்/ள்

எண் 2

துரோகி எனச் சந்தேகிக்கப்பட்டு
இயக்கம் விட்டுத் துரத்தப்பட்டவள்/ன்

எண் 3

ஆண்பிள்ளையில்லை எனச் சந்தேகிக்கப்பட்டு
வீடு விட்டுத் துரத்தப்பட்டவன்ள்

எண் 4

சந்தேகத்திற்கிடமற்ற மனைவியில்லை
என்று சந்தேகிக்கப்பட்டு துரத்தப்பட்டவள்.

இப்படியாக 123456 எண்கள் சேர்ந்தன.
கடவுளின் தொலைபேசி எண்ணும்
அதுவே எனச் சொல்லப்பட்டது.
123456 எண்ணை மீண்டும் மீண்டும் முயன்றபோது
ஒரேபதிலே கிடைத்தது.
'சந்தாதாரர் தொடர்பெல்லைக்கு
வெளியே இருக்கிறார்.
இந்தச் சந்தாதாரரை
இப்போது தொடர்புகொள்ள இயலாது'.

என் செல்லமகள் சாதனா



















நெருக்கடி வாழ்க்கையின்
பரபரப்புவேளையொன்றில்
பள்ளிகிளம்பிய தன் செல்லமகள் யுகாவிற்கு
காலைப்பொழுதில் நகம்வெட்டும் தருணத்தில்
அதன் மென்மையுணர்ந்து
விரல்கள் நடுங்குவதாய்க்
கலங்குகிறான் வில்லியம்.
கண்ணிவெடிகளால்
கைகால் இழக்கும்
பிஞ்சுமுகங்களை
அட்டையில் போட்டு
அலங்கரிக்கவேண்டாமென்று
அலறுகிறான் இளங்கோ.
ஒருபூங்கொத்தைப் போல
என்னருகில் படுத்திருந்த
என் செல்லமகள் சாதனா
கனவில் சிரித்தது
அனேகமாய்க் கடவுளுடனாயிருக்கலாம்.
அதிகாலையில்
படுக்கையை நனைத்த
அவள் மூத்திரம்
பூமியின் கிழக்குப்பகுதியிலிருந்து
வடக்குப்பகுதிக்கு
ஓடிவந்திருந்தது.
சுவரில் மாட்டியிருந்த
தேசப்படமோ ஈரத்தில் நனைந்திருந்தது.

...............

"உலகம் என்றால் என்னப்பா?"
என்றுகேட்டாள் என்செல்லமகள் சாதனா.
அது நீ விளையாடும் ஏரோப்பிளேன்
பொம்மையைப் போல ஒரு பொம்மையென்றேன்.
அவள் விளையாட
ஒரு உலகத்தையும் வாங்கித்தந்திருந்தேன்.
இப்போது என் பிரார்த்தனையெல்லாம்
நானும் கடவுளும்
கூடிச் சண்டையிடும்
இந்த தனியறைக்குள்
அவள் வந்துவிடக்கூடாது என்பதே.

- நண்பர்கள் யவனிகா மற்றும் செல்மாபிரியதர்சனுக்கு.

ஏதோ எழுதத்தோன்றுகிறது.
என்ன எழுதுவதென்றுதான்
தெரியவில்லை.
இன்னமும் இருக்கிறது
ஏதேனும் எழுதிவிடுவேனோ
என்னும் பதட்டம்.
இப்படியே இருக்கவேணும்.

Homonculus அல்லது (லக்கிலுக், உ.தமிழன் போன்றவர்களுக்குப்) புரிகிறமாதிரி ஒருகவிதை













எனக்குள் நீ
உனக்குள் நான்.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.
உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
நான், நீயெனில்
எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?

புணர்ச்சியைப் பற்றிய நான்கு கவிதைகள்

இரவு ஒரு வேசியைப்போல
அவிழ்கிறது
என்கிறான் இவன்.
வேசி ஒரு இரவைப் போல
அவிழ்கிறாள் என்று
திருத்தினேன் நான்.

------------

மிஸ்டர் எக்ஸ் மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
(மிசஸ் எக்ஸ் மிஸ்டர் எக்ஸைப் புணர்வதாய்ச் சொல்வது வழக்கமில்லை)
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் ஒய்யை நினைத்து
மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
மிசஸ் எக்ஸ் மிஸ்டர் ஒய்யை நினைத்து
மிஸ்டர் எக்ஸுடன் இருக்கிறாள்.
இப்போது படுக்கையறையில்
நான்குபேர் புணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

--------------

புணர்ச்சியைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவன் ஒருமுறைகூட புணர்ந்ததில்லை.
புணர்ச்சிபற்றிப் பேசக்கூடாதென்பவன்
புணர்ந்ததோ லட்சம்தடவைக்கும் மேல்.
புணர்ச்சிபற்றிப் பேசாது புணர்ந்தவனைக்
கவிதையைப் போலப் புணர்ந்தான் என்பதா,
புணராமலே புணர்ச்சிபற்றி எழுதியவனை
கவிதையைப் புணர்ந்தவன் என்பதா?

-----------
நன் இந்தவீட்டில் இவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறேன்.
அவன் அடுத்தவீட்டில் அவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
எங்களிருவர் வீடுகளுக்குமிடையில் சுவர்களிருக்கின்றன.
எங்களிருவர் வீட்டின் சுவர்களுக்குள்ளும் அறைகளிருக்கின்றன.
நான் இவளைப் புணர்வதும்
அவன் அவளைப் புணர்வதும்
எங்களிருவருக்குமே தெரியும்.
ஆனாலும் எங்களிருவரின்வீட்டில்
சுவர்களுமிருக்கின்றன..
அறைகளுமிருக்கின்றன.

காலம்

அவர் காலமானார்
என்றார்கள்.
நாம் என்ன ஆனோம்?

கருணைக்கொலை













பனிபெய்கிறது தயாள்!
கம்பளிகளை இறுக்கிக்கொள்.
பாம்புகள் நெளியும் பாதைகளில்
பயணம் அமையாதிருக்கட்டும்.
ரொட்டித்துண்டிற்காய்
நாவை அரிந்து தரும்படி
இறுகிக்கிடக்கிறது காலம்.
மணிக்கூண்டின் கடிகாரமுட்களில்
நசுங்கிச்செத்தது புறாவொன்று.
வேறெவரையும் விட
எச்சரிக்கையாயிரு கருணையாளர்களிடம்.
ஒவ்வொருகருணையாளனின் நிழலின்கீழும்
பதுங்கிக்கிடக்கிறது வன்மத்துடன்
உருவத்தயாராயிருக்கும் வாள்.
சாவுகடக்காத வீட்டில்
மனோன்மணி கடுகுவாங்கி
திரும்பியிருந்தபோது
பரிநிப்பானம் அடைந்திருந்தான் புத்தன்.
நேற்றுமுதல்நாள்
ஒரு சின்னஞ்சிறுதளிரை வெட்டினேன்
புத்தனின் பெயர்சொல்லி.

கவனம்













சின்னக்குழந்தையாய்
மழை
சிணுங்கிக்கொண்டிருக்கும்.

வாகனங்களின்
விரைதலினின்று
தப்பித்து ஓடும்
ஒரு காலிழந்த நாயொன்று.

அன்றாடங்களிலொன்று
அடிபட்டதன் வலியோடு
அவசரமாய் எடுக்கப்படும்
நடைபாதைக்கடைகள்.

ஒரு தொழுநோயாளியின்
பிச்சைப்பாத்திரம்
சில்லறைக்காசுகளாலன்றி
மழைநீரால் நிறையும்.

ஒதுங்க இடம்
தேடி

டு
ம்
நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.

முடிவாய்...




விடைபெறும் நேரம்
பள்ளத்தாக்கெங்கும்
அமைதியே நிரம்பியிருந்தது.

என் மார்பு ரோமங்களைத்
தனதாக்கிக்கொண்ட மிருகம்
எழுந்துவந்து
உன் கன்னங்களில் மாறி மாறி
அறைய விரும்பியது.

உடலெங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது
உப்புக்கரிக்கும் ரத்தம்.

நீ விடைபெற்றுபோனபின்
உன் பெயரெழுதி...
பெயரெழுதி...
கிழித்துப்போடுகிறேன்.

நாய்ப்பசி










யுகப்பசியெடுத்துத்
திரிந்துகொண்டிருந்தது நாய்.

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய
ஓலம்தாங்காது
உதிர்ந்து விழுந்தன விண்மீன்கள்.

பிரளயப்பசியில் தன்
பின்னுடலைக்
கடித்துப்பார்த்தும்
வராதபோது
ஆத்திரப்பட்டு
வானவிளிம்பில் போய்
முட்டிக்கொண்டது.

சூரியன்மேல்
சிறுநீர் கழித்து
ஓடிய நாயின் பற்கள்
நிலாவை
மண்ணில் போட்டுப்
புரட்டிப் புரட்டி
இழுத்துப் பார்த்தது.

காணச்சகியாத கடவுள்
ஆதாமின் விலா எலும்பெடுத்து
தூக்கிப்போட்டார்
நாய்
கடித்துக்குதற.

பிளாஸ்டிக் சிலுவை




















உடல்கள் மொழிபெயர்க்கப்படும்
பின்னிரவுவேளை
ஒரு இனிய திரவகணத்தில்
பிளாஸ்டிக்கால் ஆன சொர்க்கத்திலிருந்து
தப்பித்துவந்தார் கடவுள்.
தேநீரகத்தில் கடவுளுக்குக்
கையளிக்கப்பட்டன
PCR சனியனுக்குப் பயந்து
use and throw டம்ளர்கள்.
பூமியின் மார்பெங்கும்
பூணூலைப்போல
வெளுத்துக்கிடந்தன
பிளாஸ்டிக் டம்ளர்கள்.
கடவுள் முட்டாள் என்பதற்கு
அழிக்கப்பட முடியாத
பிளாஸ்டிக்குகளே சாட்சி.
உருவிப்போடப்பட்ட ஆணுறையின்
ஒழுகும் துளிகளில்
கடவுளின் ஆயுள்
குறைந்துகொண்டிருந்தது.
மீண்டும் தப்பித்தோடினார் கடவுள்.
வவ்வால்கள் அடையும்
பாழடைந்த மண்டபத்தின் இருள்மூலையில்
கடவுளின் காலில்
அகப்பட்டது
தேவகுமாரனின் சடலம்.
பக்கத்தில் கிடந்தது
ஒரு பிளாஸ்டிக் சிலுவை.

காட்டாற்றின் கரையிலொரு சருகு















மலையிடுக்குகளில்
கசிந்துகொண்டிருந்தது
ஆதியில் புனையப்பட்ட பாடலொன்று.

பாடலின் விஷம் தெறித்து
நீலம் பாரித்தது வெளி.

விஷமருந்திய போதையின்
வெறியில்
மயங்கி ஆடினர் மாந்தரெல்லாம்.

கைகோர்த்து
கைகோர்த்து
நடந்துமுடிந்த
ஆட்டமுடிவில்
குறிகளின் இடத்தில்
கொம்புகள் முளைத்தது எல்லோர்க்கும்.

கொம்புகளால்
தாக்கத்தொடங்கிய கூட்டத்திடை
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
புனையப்படாத பாடல்கள் பாடுவோரை.

அவரே நம் சினேகத்துக்குரியவர்.

வாய்நிரம்பிக் கொள்ளாது
ததும்பிக்கொண்டிருக்கும்
அருவிநீர்
நேற்றிரவு சுவைத்த
பெருமுலையின் நினைவு.

வெளிப்பாடு




















ராணியின் இடுப்பு
எதிர்வீட்டுக்கனகாவின்
வியர்வையில் பளபளக்கும் பின்னங்கழுத்து
பேருந்து ஓரத்தில் கையுயர்த்தி அமர்ந்திருந்த
கிராமத்துப்பெண்ணின்
வெளித்தெரியும் மார்புகள்
கல்லூரிப்பெண்ணின் சுடிதாரில்
ஒருநிமிட உற்றுநோக்கலில்
உறுத்தும் காம்புகள்
நேற்றுமுதல்நாள் பார்த்த
வட்டமிடப்பட்ட முதலெழுத்துத் திரைப்படத்தின்
புணர்தல் காட்சி
ஒரு விழாநாளின் மறுநாளில்
சீருடையல்லா வேறுடையணிந்த
பள்ளிமாணவியின்
மிதிவண்டி இருக்கைக்குப்
பிதுங்கித்ததும்பும்
பின்புறங்கள்
இது அல்லது இதுபோன்ற
ஏதேனுமொரு நிகழ்வின் எதிர்விளைவாய்க்
கற்பனையோடு
பொருதி
முடியாதிருக்க வேண்டும் ஆவலுக்கும்
முடிக்க உந்தும் முயற்சிக்குமிடையில்
முடிந்தே தீர்ந்தது.
என்றபோதினும்
எஞ்சிநிற்குமொரு போதாமை
சுய இன்பம் போலவே கவிதையும்.

சுழி

கடல் பார்த்ததும் புன்னகைக்கிறேன்.

எங்கிருந்து தொடங்கியது இது?

பார்த்தவுடன்
இதழ்பூக்கும்
உன் புன்னகையிலா?

other is hell

தண்டவாளக் கம்பிகளின்மேல்
நெடுந்தூரம் நடந்துபோகிறோம்.

வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறோம்
அல்லது வரைந்துபார்க்கிறோம்.

ஆடைகளைந்து நிர்வாணமாகிறோம்.

தற்கொலை கொண்டாடுகிறோம்.

எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.

என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?

விகிதங்கள்

எதிர்வீட்டு வாயிற்படியில்
மருமகளுக்குப்
பேன் பார்த்துக்கொண்டிருந்தாளொரு பெண்.

இழவுவீடு சென்று
குளிக்காமல்
உள்நுழைந்ததற்காய்ப்
பெருங்கூச்சலிட்டாள் மனைவி.

சலூன்கடையில் பார்த்த
ஜான்கென்னடி புகைப்படத்திற்கு
குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.

திரும்பிப்பார்த்த எனக்குத்
திகீரென்றது.
சபரிமலைக்கு
மாலை போட்டுவந்திருந்தார்
போஸ்ட்மாடர்னிஸ்ட்
(என்று சொல்லிக்கொண்ட)
யவனிகா.

ஒரு புலியைப் பிரசவித்த
ஆயாசத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த
உன் முலைக்காம்புகளில்
வேர்விட்டுத் துளிர்த்திருந்தன
சின்னஞ்சிறுதளிர்கள்.
பிடிமானமற்று அலையும்
பூமிப்பந்தின் தாகம் தணிக்க
உடையுன் பனிக்குடம்.

?

சொல்லைத் தவிர்த்துச்
சொல்ல முடியவில்லை
ஒரு சொல்கூட..
என்றபோதும்
சொல்லமுடியுமா, சொல்
உன்போலொரு
அழகான சொல்.

சார்வு

பூ விழுந்த ஒசைதாங்காது
பூமி உடைந்தது.

உடைந்த பூமியின்
ஒருபகுதி
போய்சேர்ந்தது
பிரபஞ்சத்தின் கண்களில்
தூசியாய்.

சுற்றிச்சுழன்றடிக்கும் ஒரு பேய்க்காற்றில்
வலம் வந்த பூமி இடம் மாறிப்போகலாம்.

நடைபாதையின் இருப்பவனின்
பயமெல்லாம்
வானம் தன் தலையில்
விழாமலிருப்பது குறித்தே.

கவின்

பூக்களை நிரப்பிக்கொண்ட கவிதைகள்
மனசாட்சியற்றவை.
எவரேனும் எழுதுங்களேன்
தலைகுப்புற வீழ்ந்து
தலைமோதிச்சிதறும்
மரணத்தின் அழகினை.

---------

என்ன எதிர்பார்த்து
நிலா ஒளியுமிழும்?
எவரின் ரசிப்பிற்காய்
மலர் பூக்கும்?
மீண்டும் மீண்டும் விழுவேனுன்
எழில்நுதலிலொரு மழைத்துளியாய்
நெற்றிதுடைத்து நீ
நிலத்தில் எறிந்திடினும்...


--------