ஏதோ எழுதத்தோன்றுகிறது.
என்ன எழுதுவதென்றுதான்
தெரியவில்லை.
இன்னமும் இருக்கிறது
ஏதேனும் எழுதிவிடுவேனோ
என்னும் பதட்டம்.
இப்படியே இருக்கவேணும்.
Posted by
சுகுணாதிவாகர்
at
1 comments
Homonculus அல்லது (லக்கிலுக், உ.தமிழன் போன்றவர்களுக்குப்) புரிகிறமாதிரி ஒருகவிதை

எனக்குள் நீ
உனக்குள் நான்.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.
உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
நான், நீயெனில்
எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?
Posted by
சுகுணாதிவாகர்
at
22
comments
புணர்ச்சியைப் பற்றிய நான்கு கவிதைகள்
இரவு ஒரு வேசியைப்போல
அவிழ்கிறது
என்கிறான் இவன்.
வேசி ஒரு இரவைப் போல
அவிழ்கிறாள் என்று
திருத்தினேன் நான்.
------------
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
(மிசஸ் எக்ஸ் மிஸ்டர் எக்ஸைப் புணர்வதாய்ச் சொல்வது வழக்கமில்லை)
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் ஒய்யை நினைத்து
மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
மிசஸ் எக்ஸ் மிஸ்டர் ஒய்யை நினைத்து
மிஸ்டர் எக்ஸுடன் இருக்கிறாள்.
இப்போது படுக்கையறையில்
நான்குபேர் புணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
--------------
புணர்ச்சியைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவன் ஒருமுறைகூட புணர்ந்ததில்லை.
புணர்ச்சிபற்றிப் பேசக்கூடாதென்பவன்
புணர்ந்ததோ லட்சம்தடவைக்கும் மேல்.
புணர்ச்சிபற்றிப் பேசாது புணர்ந்தவனைக்
கவிதையைப் போலப் புணர்ந்தான் என்பதா,
புணராமலே புணர்ச்சிபற்றி எழுதியவனை
கவிதையைப் புணர்ந்தவன் என்பதா?
-----------
நன் இந்தவீட்டில் இவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறேன்.
அவன் அடுத்தவீட்டில் அவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
எங்களிருவர் வீடுகளுக்குமிடையில் சுவர்களிருக்கின்றன.
எங்களிருவர் வீட்டின் சுவர்களுக்குள்ளும் அறைகளிருக்கின்றன.
நான் இவளைப் புணர்வதும்
அவன் அவளைப் புணர்வதும்
எங்களிருவருக்குமே தெரியும்.
ஆனாலும் எங்களிருவரின்வீட்டில்
சுவர்களுமிருக்கின்றன..
அறைகளுமிருக்கின்றன.
Posted by
சுகுணாதிவாகர்
at
10
comments
கருணைக்கொலை

பனிபெய்கிறது தயாள்!
கம்பளிகளை இறுக்கிக்கொள்.
பாம்புகள் நெளியும் பாதைகளில்
பயணம் அமையாதிருக்கட்டும்.
ரொட்டித்துண்டிற்காய்
நாவை அரிந்து தரும்படி
இறுகிக்கிடக்கிறது காலம்.
மணிக்கூண்டின் கடிகாரமுட்களில்
நசுங்கிச்செத்தது புறாவொன்று.
வேறெவரையும் விட
எச்சரிக்கையாயிரு கருணையாளர்களிடம்.
ஒவ்வொருகருணையாளனின் நிழலின்கீழும்
பதுங்கிக்கிடக்கிறது வன்மத்துடன்
உருவத்தயாராயிருக்கும் வாள்.
சாவுகடக்காத வீட்டில்
மனோன்மணி கடுகுவாங்கி
திரும்பியிருந்தபோது
பரிநிப்பானம் அடைந்திருந்தான் புத்தன்.
நேற்றுமுதல்நாள்
ஒரு சின்னஞ்சிறுதளிரை வெட்டினேன்
புத்தனின் பெயர்சொல்லி.
Posted by
சுகுணாதிவாகர்
at
4
comments
கவனம்

சின்னக்குழந்தையாய்
மழை
சிணுங்கிக்கொண்டிருக்கும்.
வாகனங்களின்
விரைதலினின்று
தப்பித்து ஓடும்
ஒரு காலிழந்த நாயொன்று.
அன்றாடங்களிலொன்று
அடிபட்டதன் வலியோடு
அவசரமாய் எடுக்கப்படும்
நடைபாதைக்கடைகள்.
ஒரு தொழுநோயாளியின்
பிச்சைப்பாத்திரம்
சில்லறைக்காசுகளாலன்றி
மழைநீரால் நிறையும்.
ஒதுங்க இடம்
தேடி
ஓ
டு
ம்
நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.
Posted by
சுகுணாதிவாகர்
at
8
comments
முடிவாய்...
பள்ளத்தாக்கெங்கும்
அமைதியே நிரம்பியிருந்தது.
என் மார்பு ரோமங்களைத்
தனதாக்கிக்கொண்ட மிருகம்
எழுந்துவந்து
உன் கன்னங்களில் மாறி மாறி
அறைய விரும்பியது.
உடலெங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது
உப்புக்கரிக்கும் ரத்தம்.
நீ விடைபெற்றுபோனபின்
உன் பெயரெழுதி...
பெயரெழுதி...
கிழித்துப்போடுகிறேன்.
Posted by
சுகுணாதிவாகர்
at
2
comments
