அசைந்து அசைந்து
மலைப்பாம்பு
வந்து சேர்வதற்குள்
மரணம்தான்
எவ்வளவு நேரம்
காத்திருக்க வேண்டியதிருக்கிறது?

புத்தம் புதிய ஏற்பாடு

2014 ஆண்டுகளுக்கு முன்பு 
இதே தினத்தில்
தவறுதலாய்ப் பிறந்துவிட்டார் யேசு.
அடல் பிகாரிஜி அவரை மன்னியும்!
நீங்களும்தான் குர்தா சாகேப்...
பிளாஸ்டிக் சர்ஜரியே
அறியாத காலத்தில் பிறந்தவர்
தான் செய்தது இன்னதென்று மட்டும்
அறிந்திருப்பாரா என்ன?
தயவுசெய்து முள் முடிகளை
காந்தியின் தலைக்கு மாற்றுங்கள்.
சிலுவைக்கு யாராவது
சிக்காமலா போவார்கள்?

சிவாஜி சாகவில்லை

‘கை வீசம்மா கைவீசு' பாடிக்கொண்டே
சாவித்திரியுடன் செத்துப்போன சிவாஜி
சில வருடங்களுக்குப் பிறகு
உயிர்த்தெழுந்தார்.
இப்போது அவர் ரத்தத்தில்
உப்பின் அளவு அதிகரித்திருந்தது.
சதா துடித்துக்கொண்டிருந்த
இடப்பக்க மீசையை அடக்க
யாரோ அவர் கையில்
ஒரு பதக்கத்தைத் திணித்தார்கள்.
இப்போது செத்துக்கொண்டிருந்த
ஸ்ரீகாந்தை அணைத்தபடி
‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’
பாடத் தொடங்கினார்.
ஆனால் ஒன்று,
இந்தமுறை சிவாஜி சாகவில்லை.

ஆதியில் இருந்தது இப்போது இல்லை



விலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


நாயகர்களின் வருகை

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன.
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.
தேர்க்கால்களில் கன்றுகள்
அடிபடுவதுபற்றி கவலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.
கடல் விழுங்கி
வாமனர்களின் நகரங்கள் அழியுமொரு நாளில்
தொடங்கி விட்டன
நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை மேசையில்
கிடத்தப்பட்டிருப்பது நீங்களும் நானும்தான்.
இரண்டாம், மூன்றாம், எட்டாம், பதினான்காம்
மன்னர்களின் மகுடங்களை அளவிடும்
வாய்ப்பு வரலாறு அழைக்கிறது.
மகுடங்களின் அளவு ஏறக்குறைய
சவப்பெட்டிகளின் அளவுகளை ஒத்திருப்பது
தற்செயலானது என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
தூரதேசங்களின் கிளர்ச்சி
உங்கள் செவிகளை எட்டாதிருக்கட்டும்.
கண்கள் விறைத்த பிணங்களை முன்னிட்டு
முறையீடு செய்பவர்களின் பக்கம்
உங்கள் கவனம் திரும்பாதிருப்பது இன்னமும் நல்லது.
நேற்று ஆண்குழந்தை பிறந்த
நண்பனின் குறுஞ்செய்தியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
வரலாறு பள்ளங்களை நிரப்பும்.
அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.

ஒற்றைத்துளியில் உறையும் கடல்

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில்
இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது.
அந்த கரியநிறப் பறவை
நம் தலைமீதுதான் பயணிக்கிறது
என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம்.
ஆதிவாசி வனாந்திர மய்யத்தில்
கனன்றெரியும் நெருப்பில் ஒழுகும்
மாம்சத்துளி போலவே
உருகி வழிகிறது காலம்.
ஆம், அவன் வளர்ந்திருக்கிறான்.
முன்பு அவன் ஒரு சொல்லைப் போல இருந்தான்.
இப்போது சொல்லாகியிருக்கிறான்.
ஒரு நாளை நான்காய் எட்டாய் மடித்து
அனாயசமாய்க் கிழித்தெறிகிறான்.
அந்த குதூகலம் நம்மிடமில்லை
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சகல ஆண்களிலும் பெண்களிலும்
குழந்தைமையைப் பறித்த குற்றவுணர்வோடு
அவனருகே மண்டியிடுபவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
இனி அவரது கோப்பை
அவனது சிறுநீர்ச்சூட்டால் நிரப்பப்படட்டும்.
கடவுள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

(எதிர்வரும் 30.09.10 அன்று முதல் பிறந்தநாளைச் சந்திக்கவிருக்கும் என் மகன் கத்தார் நவீன்சித்தார்த்திற்கு.)

முகாம்தேசம்


















இரண்டு கவிதைகளை
உன் வலைக்குள் திணிக்க முயன்றாய்.
இப்போது உன் விதைப்பைக்குள்
இரண்டு பறவைகள்.
-----------
அவன் தன் மனைவிக்கு உதவுவதற்காகத்தான்
சமையலறைக்குள் நுழைந்தான்.
அவளை விடவும்
அழகான ஒரு தோசையைச் சுடுவதே
அவனது நோக்கமாயிருந்தது.
முதல் கரண்டி மாவிலேயே
தோசை என்பது
மையத்திலிருந்து விளிம்புக்குப் பரவும் அதிகாரம்
என்பதைக் கண்டுபிடித்தான்.
சில தோசைகள்
பிய்ந்தும் கருகியும் வர ஆரம்பித்தபோது
அவன் தன் கோட்பாடுகளைக் கைவிட்டான்.
ஒரேயொரு தனித்துவமான தோசையை
சுட்டே தீருவதென்ற ஆவலில்
சமையலறையிலிருந்த
மிக்சர், ஜீனி, கடலை மற்றும்
கரப்பான்பூச்சிகளின் செதில்களைத்
தூவத்தொடங்கினான்.
இருந்தபோதிலும் 
தோசையின் எல்லைகளில்
தூவப்படும் எண்ணெய்
சாளரங்களற்ற சமையலறையில்
புழுங்கித் தவிக்கும் மனைவியின்
வியர்வை வாசனையை விடவும்
மேலானதில்லை என்பதை உணர்ந்தபோது
அவன் தன் கைவிரல்களைத்
துண்டாக்கித் தூவினான்.
இப்போது தோசை முழுமையடைந்திருந்தது.
--------------
ஆகச்சிறந்த படைப்புகள் எழுதி
ஆகச்சிறந்த புத்தகங்களாக்கி அவன்
ஆகச்சிறந்த எழுத்தாளர் ஆகியிருந்தான். 
பின்னும் அவன்
ஆகச்சிறந்த மனிதர்கள் மீது
ஆகச்சிறந்த அவதூறுகளைச் 
சொல்லத் துவங்கினான்.
ஆகச்சிறந்த மரணங்கள் மீது
ஆகச்சிறந்த பொய்களைப்
பரப்பவும் செய்தான்.
ஆகச்சிறந்த வாசகர்கள் அவனுக்கு
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினர்.
அல்லது ஆகச்சிறந்த வாசகர்களைப் போல
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினான்.
ஏற்கனவே தோல்வியின்
புழுக்கத்திலிருந்த கடவுள் அவனுக்கு
ஆகச்சிறந்த ஆசிர்வாதங்களை அனுப்பியிருந்தார்.
பூமிக்குத் தாமதாய் வந்த
கடவுளின் ஆசிர்வாதங்கள்
ஒரு அழகிய பழத்தின் வாசனையைப் போலிருந்தது.
கடவுள் விட்டதிலேயே
ஆகச்சிறந்த குசு இதுதான் என்று சொல்லிக்கொண்டான்.
--------------
ஒரு தேசத்தின் வரைபடத்தை
வரைவதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள்.
முதலில் மலைகளையும் காடுகளையும்
நதிகளையும் வரைபடத்த்லிருந்து
நீக்கிவிடுவதென்று தீர்மானித்திருந்தனர்.
அவை இப்போது 
அயல்தேச நிறுவனங்களின் உடைமைகளாயிருந்தன.
பின்னுமிருந்த விலங்குகளிலும் மனிதர்களிலும்
விலங்குகளை மருந்துகளின் உற்பத்திக்காகவும்
மனிதர்களை மருந்துகளின் விற்பனைக்காகவும்
ஒதுக்கிவைத்தனர்.
ஆட்சியாளர்கள், போலீஸ்வீரர்கள், ராணுவத்தியாகிகளை
எந்த வகையினத்தில் சேர்ப்பதென்ற 
குழப்பம் நீடித்தது. 
அதற்குள் அண்டைநாட்டொன்றின் 
வரைபடம் புகழ்பெற்றிருந்தது.
இனிவரும் தேசங்களின்
வரைபட மாதிரி அதுவே என புகழப்பட்டது.
அது முதலில் ஒரு
சதுரங்கப்பலகையைப் போலிருந்தது.
ஒரு துப்பாக்கி வைத்தால்
பல மரணங்கள் விளைந்தன.
ஒரு பேச்சுவார்த்தை வைத்தால்
பல கூடாரங்கள் முளைத்தன.
ஒரு பதுங்குகுழி வெட்டினால்
சதுரங்கப்பலகையிலிருந்து
குண்டுகளைப் பொழிந்தபடி
விமானங்கள் பறந்தன.
முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள்
இருதரப்பிலும் வெட்டும் காயகளாகப் பயனாகினர்.
இறுதியில் சதுரங்கப்பலகை
முகாம்களின் வடிவத்தில் மாறியது. 
முகாம்களைப் போல் தேசத்தின் 
வரைபடத்தை அமைப்பதென்றும்
தேசத்தை முகாம்களைப் போல்
அமைப்பதென்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

   நன்றி : லும்பினி