துவக்குகள்
டாங்கிகள்
செல்கள்
விமானங்கள்
தற்கொலைகள்
கொலைகள்
வன்புணர்தல்கள்
கடத்தல்கள்
மாவீரர்கள்
துரோகிகள்
போர்கள்
பேச்சுவார்த்தைகள்'
ஒப்பந்தங்கள்
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
ஒரு வார்த்தையல்ல
மரணம்.
( 07.12.2008 அன்று தமிழ்க்கவிஞர்கள் இலங்கைத்தமிழர் படுகொலைக்கு எதிராக நடத்திய கணடனக் கவிதைப் போராட்டத்தில் வாசித்தது)
ஈழம்...
Posted by
சுகுணாதிவாகர்
at
6
comments
வினை


ஒருநாயைக் கொல்வது சுலபம்.
அவசரமாய் ஒரு வண்டியேற்றி...
அல்லது சாவகாசமாய்
புணர்ச்சியின்போது
கல்லெறிந்து....
வயிறுவெடித்துச் செத்துக்கிடக்கும்
நாயைக் காணநேர்வதுதான் கடினம்.
Posted by
சுகுணாதிவாகர்
at
2
comments
கனவின் குருதி

வெறும் கணம்
இப்போது
உன்முன்னும் என்முன்னும்.
மணலில் ஒளியும் நண்டுகள்போல
வார்த்தைகள் மறைந்தன.
கானகத்தின்
அடர் இருளில் தொலைவதற்காகவே
என்னை வந்தடைந்தாய்.
என் மார்பு ரோமங்களில்
பூப்பூக்கும் நாளில் வா
நிலவை உண்போம்.
Posted by
சுகுணாதிவாகர்
at
0
comments
அதுவுமின்றி.....

சொற்கள் எறும்புகளைப் போல
ஊர்கின்றன.
கொஞ்சம் கூச்சமுடனும்
கொஞ்சம் வலியுடனும்.
-----------------
இன்னும் மடிவிட்டு இறங்காத
குழந்தையைப் போல
இருக்கிறது என்னிடம்
ஒரே ஒரு சொல்.
Posted by
சுகுணாதிவாகர்
at
2
comments
பயணமற்ற வெறும் பாதை

மழையற்றுப்போன பூமியின் கண்களில்
சூரிய எரிச்சல்.
தணிக்கும் பனித்துளி முத்தம்.
இன்னும் தாவெனக் கைநீட்டிக்
காத்திருக்கும் கொன்றைச்சிவப்பிற்காய்
அதிகாலை. அப்பனியில்
உடன்வந்த யாத்ரீகனின்
ஷூத்தடங்கள் பட்டு
விலகி மரிக்கும் புல்வெளியில்
இறுதியாய்க் கேட்டது அவ்
வண்ணத்துப்பூச்சியின் பாடல்.
காலைகளைப் பார்ப்பதற்காய்
உறக்கத்தைத் தொலைக்க வேண்டிய
அவசியமில்லை என்று
போர்வைக்குள்
புதைகிறாள் அவள்.
Posted by
சுகுணாதிவாகர்
at
4
comments
கொலைக்களம்

வியப்பதற்கு ஏதுமில்லை
வாட்களின் பளபளப்பு.
யுத்தமென்று சொல்வதற்கும்
நியாயங்களில்லை.
சுன்னத்குறியினரைத்
தேடியலையும்
வாளின்பசியின்முன்
கையறுநிலையன்றி யாதுமில்லை.
மறைப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும்
என்றாயின அடையாளங்கள்.
கழுகும்
சிறகுவிரிக்கும்நிலத்தில்
சிசுக்களின் ரத்த நிணங்களால்
ஈரப்பட்டது பூமி.
உரத்த அழுகுரல்களில்
அமுங்கிப்போனது
வரலாற்றில் முன் ஒலித்த
கிழட்டுத்தீனக்குரல்.
இன்னுமொரு
கொடுமழை வரும் அறிகுறியாய்ச்
சிவந்துகிடக்கிறது வானம்.
பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
செத்துக்கிடந்தார் காந்தி.
(குஜராத் இனப்படுகொலையையொட்டி ஆளூர் ஷா நவாஸ் தொகுத்து வானம் வெளீயீட்டகம் சார்பில் வெளிவந்த 'தோட்டாக்கள்' கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை)
Posted by
சுகுணாதிவாகர்
at
5
comments
சமிக்ஞையில் ஒளிரும் கண்கள்

தானியமூட்டைகளைத் திடுடித்தின்கையில்
முதன்முதலாய்
செத்துமடிந்தன எலிகள்.
மலையுச்சியில் சரிகின்றன அழுகுரல்கள்.
ஒற்றைப்பனை மரத்தினின்று
தொடர்கின்றன
வேவுபார்க்கும் கண்கள்.
உங்கள் கால்களுக்கடியில்
கிடக்கும் ஒரு பூரானின் பிணத்தைக்
கவனிக்கவியலாது
விரைபவராயிருக்கலாம் நீங்கள்.
நல்லது இப்போது
ஒளிரும் தொலைக்காட்சிப் பெட்டியில்
குலுங்கி விறைத்து
தெறிக்கும் பாப்ப்பாடகியின்
பட்டன்களோடு உங்கள் கண்கள்.
உங்கள் பாப்கார்ன் பொட்டலத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள்
முடிந்தால் ஒரு கோக் டின்னோடு.
உயர்ந்துகொண்டிருக்கிறது விலைவாசி
நீங்கள் இப்போது குனியலாம்
பின்னால் உறுத்தும் துப்பாக்கியின் சமிக்ஞைக்காக.
Posted by
சுகுணாதிவாகர்
at
1 comments